Wednesday, January 30, 2013

மாலை மலர் : ஊடக அத்துமீறல் -- நந்தகோபால்

 
23-1-2013 மாலைமலர் சேலம் பதிப்பில் பக் 5இல் "ஆசிரியர் செக்ஸ் பட விவகாரம்..மேலும் 2 ஆசிரியைகள் சஸ்பெண்டு " எனும் தலைப்பில் வெளியாகியிருந்த அந்த செய்தி வால்பாறை பள்ளி ஒன்றில் நடந்த பாலியல் அத்துமீறலை பற்றியது. பள்ளியின் தலைமை ஆசிரியர் ஒருவர் சக ஆசிரியகளுடனான தனது பாலியல் உறவினை வீடியோ எடுத்திருக்கிறார். இந்த வீடியோ படங்கள் இணையத்தில் வெளியாகி அப்பகுதி மக்களிடம் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு மக்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டுள்ளார். இச்செய்தியை மாலைமலர் பதிவு செய்திருக்கும் விதம் ஊடக தர்மங்களுக்கு நேர் எதிராக உள்ளது.
 
காணொளியில் உள்ளதாக கூறப்படும் பெண்களின் பெயர்களையும் அவர்கள் எந்த பள்ளியில் பணியாற்றுகிறார்கள் என்பதையும் மாலைமலர் வெளிப்படையாக வெளியிட்டிருக்கிறது. சமுதாயத்தில் குறிப்பிடதக்க பணியில் இருக்கும் பெண்களை பற்றிய எந்தவொரு அக்கறையும் இல்லாமல் அவர்கள் பெயர்களையும் இன்ன பிற விவரங்களையும் வெளியிட்டிருப்பது அவர்களை எந்நிலைக்கு ஆளாக்கும் என்பதை மாலைமலர் யோசிக்கவில்லை. மேலும் இந்த குற்றத்தின் தன்மையும் தெளிவுபட பார்க்கபடவில்லை. காணொளி எடுக்கபட்டது தலைமை ஆசிரியராக பணிபுரிந்தவர் என்று நம்பபடுகிறது எனவே இதனை இணையத்தில் உலாவ விட்டதும் அவராக இருக்க கூடும். இந்நிலையில் கணொலியில் உள்ள பெண்கள் மீது சுமத்தப்படும் குற்றம் என்ன என்பது கேள்விக்குரியது? இத்தகைய பாலியல் அத்துமிறல்கள் பணியின் போதும் , பணியிடத்திலும் நடத்தப்பட்டிருந்தால் அது தண்டனைகுரிய குற்றமாக அப்பெண்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய குற்றமாக இருக்கும். மற்றபடி இங்கு காணொளி எடுத்து உலாவ விட்டதே மிகப்பெரிய குற்றமாகும். இதனை செய்தவர் ஒரு ஆண் என்பது குறிப்பிடதக்கது.
 
ஆனால் மாலைமலர் ஆணின் இந்த குற்றத்தின் தீவிரத்தை மறைத்து ஆணாதிக்க தன்மையில் செய்தியை வெளியிட்டுள்ளது. இச்செய்தியை மூன்று புகைப்படங்களுடன் மாலைமலர் பதிவு செய்துள்ளது. குற்றம் இழைக்கப்பட்டதாக கூறப்படும் தலைமை ஆசிரியரின் புகைப்படம் ஓன்று. மற்ற இரு படங்கள் கணொலியிலிருந்து எடுக்கப்பட்ட பெண்ணின் படங்கள். இப்படத்தில் தலைமை ஆசிரியரான ஆணின் படம் சிறிதாகவும் காணொளியில் இருந்து எடுக்கப்பட்ட பெண்ணின் படங்கள் அதை விட பெரியதாகவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்கு காரணம் அப்பெண்ணின் முகம் பெரியதாகவும் தெளிவாகவும் தெரிய வேண்டும் என்பது தான் என்பது அப்படமானது. மேலும் கணொலியிலிருந்து படங்களை எடுத்து பதிப்பித்தது கணொலியை எடுத்து உலாவ விட்டதற்கு இணையான ஒரு செயல் ஆகும். அத்தோடு இணைய தொடர்பில்லாத எண்ணற்ற பாமர மக்களையும் சென்றடையும் தினசரி என்பதால் அதை விட பாதிப்பை ஏற்படுத்தும் செயல் ஆகும்.
 
 
சமூகத்தில் பெண்களின் மீதான பாலியல் கொடுமைகளும் மிகுந்த கவனம் பெற்றிருக்கும் இந்த வேளையில் பெண்களின் மீதான பிற்போக்கு கருத்தியல்களை திணிக்கும் சூழலும் வலுத்து வருகின்றன. இந்நிலையில் பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும் ஆபாசமாகவும் வெளியிடப்படும் செய்திகள் அத்தகைய பிற்போக்கு கருத்தியல்களுக்கு துணை சேர்க்கும் என்பதை மாலைமலர் உணர்ந்து கொண்டு சமூக பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும்.
 
 
 

No comments:

Post a Comment