Thursday, September 6, 2012

இலங்கைப் பயணிகள் விரட்டப்பட்டதும் ஊடகப்பதிவுகளும் --- மீனா


தமிழகக் கால்பந்து அணிகளுடன் நட்புரீதியிலான விளையாட்டுகளில் பங்கேற்க வந்த இலங்கைக் கால்பந்து வீரர்களைத் (கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள்) தமிழக முதல்வர் ஜெயலலிதா திருப்பி அனுப்பியுள்ளார். மேலும் நேரு விளையாட்டரங்கில் போட்டிகளை நடத்த அனுமதித்த விளையாட்டரங்கப் பொறுப்பு அதிகாரியைத் தற்காலிகப் பணிநீக்கம் செய்ததோடு துறைரீதியான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக அரசின் இந்தச் செயல் ஒருபுறம் இருக்க, பூண்டி மாதா கோயில், வேளாங்கண்ணி ஆகிய இடங்களுக்குப் புனிதயாத்திரைக்காக வந்திருந்த சிங்களர்களை ம.தி.மு.க, நாம் தமிழர், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய அமைப்பினர் விரட்டியடித்துள்ளனர். சுற்றுலாவிற்காக வந்த அம்மக்களுள் தமிழ்பேசும் இலங்கைத் தமிழர்களும் இருந்தது குறிப்பிடத்தக்கது. அமைப்புகளின் கடும் எதிர்ப்பால், புனித யாத்திரை வந்திருந்த 178 பேரையும் இலங்கைக்குத் திருப்பி அனுப்புவதற்காக சிறப்பு விமானம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. திருச்சி விமான நிலையத்திற்கு 7 வேன்களில் போலிஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டபோது, காட்டூர் அருகே  பத்துக்கும் மேற்பட்டோர் கொண்ட அடையாளம் தெரியாத கும்பல் வாகனங்களை மறித்து கற்கள் மற்றும் உருட்டுக்கட்டைகளால் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியுள்ளது. பதட்டமான அந்தச் சூழ்நிலைக்குப் பின் பலத்த பாதுகாப்புடன் அவர்கள் விமானநிலையம் அழைத்துச் செல்லப்பட்டு இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

சமீப நாட்களில் பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் செய்திகளுக்கு ஊடகங்கள் பலவும் முக்கியத்துவம் அளித்திருந்தன. எனினும் பல முக்கிய ஊடகங்களும் இவற்றை ஒரு செய்தியாகவே பரிமாறி இருந்த நிலையில் ‘தினமணி’ மற்றும் ‘இந்து’ நாளிதழில் வெளிவந்த தலையங்கங்கள் தமிழக அரசின் இந்தச் செயலைக் கண்டித்து, அதன் விளைவுகளைச் சுட்டிக்காட்டி, ஊடகத்துறைக்கான பொறுப்புகளோடு செயல்பட்டிருந்தன. அவற்றைக் குறித்துப் பார்க்கும் முன் சில செய்திகளைப் பகிர்ந்துகொள்ள வேண்டும்.


 கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி தமிழகம் வந்திருந்த ராயல் கல்லூரி (கொழும்பு) கால்பந்தாட்ட வீரர்கள், ஆகஸ்ட் 31 ஆம் தேதி சென்னை சுங்க இலாகா அணியுடன் நேரு விளையாட்டரங்கில் நட்புரீதியான போட்டிகளில் பங்கேற்றுள்ளனர். இதனை அறிந்த தமிழக முதல்வர் இந்தச் செயலை வன்மையாகக் கண்டித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார் :

 (இலங்கை ராணுவ வீரர்களுக்குத் தொழில்நுட்பப் பயிற்சி அளித்து தமிழக மக்களின் உணர்வுகளை மத்திய அரசு புண்படுத்தும்) “இந்தச் சூழ்நிலையில், இலங்கையைச் சேர்ந்த கால்பந்து விளையாட்டு வீரர்கள், தங்களுடைய திறமையை வளர்த்துக் கொள்ளும் வகையில், நட்பு ரீதியிலான போட்டிகளில் கலந்து கொள்ள தமிழகம் வர மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மத்திய அரசின் இந்தச் செயல் தமிழக மக்களை அவமானப்படுத்தும் செயல் ஆகும். மத்திய அரசின் இந்தச் செயலுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 தனக்கு இல்லாத அதிகாரத்தை பயன்படுத்தி இலங்கை விளையாட்டு வீரர்களை நேரு விளையாட்டரங்கில் கால்பந்து விளையாட அனுமதி அளித்ததன் மூலம் தமிழக மக்களின் உணர்வுகளை நேரு விளையாட்டரங்க பொறுப்பு அதிகாரி கொச்சைப் படுத்தியுள்ளார்.
எனவே, அந்த அதிகாரியை தற்காலிக பணிநீக்கம் செய்து துறைரீதியான நடவடிக்கை எடுக்கும்படி தலைமைச் செயலாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இலங்கை கால்பந்து வீரர்களுக்காக எந்த போட்டிகளும் தமிழகத்தில் நடத்தக் கூடாது என்றும், அவர்களை இலங்கைக்கு உடனடியாக திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதே போன்று வேலம்மாள் மேல்நிலைப் பள்ளியுடன் கால்பந்து போட்டி விளையாட சென்னை வந்துள்ள இலங்கை, ரத்தினபுராவைச் சேர்ந்த ஹில்பர்ன் இன்டர்நேஷனல் பள்ளியின் 8 மாணவர்கள் மற்றும் ஒரு பயிற்சியாளரையும் திருப்பி அனுப்ப உத்தரவிட்டுள்ளேன்.”
அப்பாவித் தமிழர்களைக் கொத்துக் குண்டுகள் எறிந்து கொன்று குவித்த இலங்கை ராணுவத்திற்கு தமிழகத்திலோ இந்தியாவிலோ பயிற்சி அளிக்கக் கூடாது என்று எழுப்பப்படும் முழக்கங்களை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. அப்பட்டமான இனவெறித்தன்மை கொண்ட ராஜபக்சவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதும் கருப்புக்கொடி காட்டுவதுமான செயல்பாடுகளுக்குப் பின் உள்ள தமிழரது உணர்வுகளை ஏற்றுக்கொள்ள முடிகிறது. ஆனால் இலங்கை அரசாங்கம் புரிந்த குற்றங்களின் அடிப்படையில் இலங்கையின் ஒட்டுமொத்த சிவில் சமூகத்தின் மீதும் வெறுப்பை உமிழ்வதை எந்தவகையில் ஒப்புக்கொள்வது? ராஜபக்சவின் போர்க் குற்றங்களுக்கும் இனவெறிச் செயல்பாடுகளுக்கும் அப்பாவி இலங்கைக் குடிமக்களும் பொறுப்பேற்க வேண்டுமென்றால் காங்கிரஸின் அமெரிக்கக் கைக்கூலித்தனத்திற்கும் பா.ஜ.க.வின் இந்துத்துவ அரசியலுக்கும் நாம் பொறுப்பேற்கத் தயாரா?
இலங்கையின் சொந்த மக்களான தமிழர்கள் இரண்டாந்தர குடிமக்களாக நடத்தப்படும் அவலத்தைக் கண்டு நரம்பு புடைக்க வீறிட்டெழும் தமிழ் அமைப்புகளும் அரசியல்வாதிகளும் தமிழகத்தில் ஒருவேளைச் சோற்றுக்கும் ஒரு கூரை வீட்டிற்கும் அல்லல்படும் அகதிகளைக் குறித்து வாய்திறக்கத் தயாரா? அவ்வளவு ஏன், அன்றாடம் பற்றி எரிகிற சொந்தத்தமிழர்களின் குடிசைகள் பக்கம் எட்டியேனும் பார்க்கத் தயாரா?
சிறப்பு முகாம்களில் கைதிகளாக அடைத்து வைக்கப்பட்டிருக்கும் ஈழத்தமிழர்களின் மீது போடப்பட்டுள்ள வழக்குகளைத் திரும்பப்பெறுதல் அல்லது விரைந்து நடத்தி முடித்து அவர்களை விடுதலை செய்தல் என்பதான கோரிக்கைகளுக்கு முதல்வர் ஜெயலலிதா செவிமடுப்பதாகத் தெரியவில்லை. சிறப்பு முகாம்களில் இருந்து திறந்தவெளி முகாம்களுக்கு மாற்றவேண்டும் என்ற நியாயமான கோரிக்கையை முன்வைத்து அறவழியில் உண்ணாவிரதம் இருந்த ஈழத்தமிழர் செந்தூரன் மீது ‘தற்கொலை முயற்சி’ என்று இன்னொரு குற்றம் சுமத்தி புழல் சிறையில் அடைத்திருக்கிறார். ஆனால் இன்று தமிழர்களுக்குத் துரோகம் இழைத்த இலங்கையின் மீது பொருளாதாரத்தடை விதிக்க வேண்டும் என்றும் கால்பந்து விளையாட்டு வீரர்களைக்கூட தமிழகத்திற்குள் நுழையவிடக் கூடாதென்றும் அவர் கொதித்தெழுவதை எப்படிப் புரிந்துகொள்வது?
தமது சொந்த அரசியல் தேவைகளுக்காகவும் லாபங்களுக்காகவும் இலங்கைக்கு எதிரான போர்க்கொடியை இறுக்கிப்பிடிக்கும் அரசியல் அமைப்புகளும் தமிழரின் நலன்களுக்காக குரலுயர்த்தும் அமைப்புகளும் தற்போது சிவில் சமூகத்திற்கே எதிராகத் திரும்பி இருப்பது வருந்தத்தக்கது. நான்காம்கட்டப் போர் முடிந்து ஒரு மயான அமைதி உலவிக்கொண்டிருக்கும் இன்றைய சூழலில் சிங்கள – தமிழ்ச் சமூகங்களுக்கு இடையே பகைமறப்பைத் தோற்றுவிப்பதும் நேசங்களை உற்பவிப்பதும் தமிழர் நலனில் அக்கறை கொண்ட – சமூக நல்லுறவுகளின் மீது அக்கறை கொண்ட ஒவ்வொருவரின் கடமை.
தமிழகத்திற்கு விருந்தினர்களாக – புனித யாத்திரைப் பயணிகளாக வந்தவர்களை இப்படித் திருப்பி அனுப்பியிருப்பது மோசமான பின்விளைவுகளுக்கே இட்டுச்செல்லும். இளம் தலைமுறையினரிடமும் பொது மக்களிடமும் இப்படிக் கசப்புணர்வுகளை ஏற்படுத்துவது ஆபத்தானது. சிங்கள மக்கள் அனைவரையும் ராஜபக்சவின் ராணுவப் படையினராக - ஒருபடித்தானவர்களாகப் பார்க்கும் அபத்தித்திலிருந்தே இந்தத் தவறுகள் நிகழ்கின்றன. நான்காம் கட்டப்போர் உச்சகட்டத்தில் இருந்த சூழலில் இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களை வெட்ட வெளிச்சமாக்கியதில் சிங்களப் பத்திரிக்கையாளர்களுக்கும் சிங்கள- மனித உரிமை ஆர்வலர்களுக்கும் மிகமுக்கியப் பங்கிருந்ததை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. இலங்கை அரசை எதிர்த்து நின்றதற்காக அவர்கள் பழிவாங்கப்பட்டதும் சிலர் கொல்லப்பட்டதும், பலர் உயிருக்கு அஞ்சித் தப்பியோடியதும் எண்ணிப்பார்க்க வேண்டியது.இவற்றையெல்லாம் கணக்கிலெடுக்காமல் தமிழக அரசியல் அமைப்புகள்  நிகழ்த்தியுள்ள செயல்கள் கண்டிக்கத்தக்கன. மனித உரிமை அமைப்புகளும் சமூக ஆர்வலர்களும் இதன்மீதான தமது கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.
 மேலே கூறியுள்ளபடி, ஊடகங்கள் பலவும் இதனை ஒரு செய்தியாகவே பதிவு செய்திருந்த நிலையில் ‘தினமணி’ மற்றும் ‘இந்து’ நாளிதழில் வெளிவந்த தலையங்கங்கள் (செப்.4) தமிழக அரசின் செயலைக் கண்டித்திருந்ததன் மூலம் தனது ஊடகப் பொறுப்பினை வெளிக்காட்டியிருக்கின்றன.
 “தேவை நிதானம் ஆத்திரமல்ல” ( http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Editorial&artid=655164&SectionID=132&MainSectionID=132&SEO=&Title=)என்ற தலைப்பில் வெளிவந்த தினமணி தலையங்கம், “இலங்கைத் தமிழர் மீது மிக வன்மையான தாக்குதல் நடைபெற்ற நாளில், இலங்கை கிரிக்கெட் அணி இந்திய அணியுடன் விளையாடியது. அவர்களைத் திருப்பி அனுப்பவில்லை. இந்திய அணி இலங்கையில் விளையாடியது. தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் இந்த ஆட்டத்தில் பங்கேற்கக்கூடாது என்று நாம் கேட்கவும் இல்லை. இந்திய-இலங்கை அணியின் கிரிக்கெட் விளையாட்டைத் தமிழ்நாட்டிலுள்ள தொலைக்காட்சிச் சேனல்கள் ஒளிபரப்பக்கூடாது என்று தடை விதிக்கவில்லை. தமிழகத்தைச் சேர்ந்த ஆன்மிகவாதிகள், திரைப்பட நட்சத்திரங்கள் டி.எம். கிருஷ்ணா உள்ளிட்ட கர்நாடக சங்கீதக் கலைஞர்கள் இலங்கைக்குச் சென்று வந்ததை யாரும் தவறாகக் கருதவில்லை. அப்படியிருக்கும்போது, யாருமே கேள்விப்படாத கால்பந்து அணிக்கு மட்டும் ஏன் இத்தகைய எதிர்வினை?”
“.......அப்படியானால் இலங்கைத் தமிழரைத் தவிர வேறு யாரும் இலங்கையிலிருந்து தமிழ்நாட்டுக்கு வரக்கூடாதா? பயிற்சிக்காக இலங்கை மருத்துவர்கள் இங்கே வரக்கூடாது. சிகிச்சைக்காக சிங்களத்தவர் வரக்கூடாது. படிப்புக்காக மாணவர்கள் வரக்கூடாது. விளையாட வரக்கூடாது. சாமி கும்பிட வரக்கூடாது. புத்தகயாவில் சிங்களவர் நுழையத் தடை விதிக்க வேண்டும். ஆனால், ஈழத்தமிழர்களின் வாழ்வைக் குலைத்த ராஜபட்சயும் அவரது குடும்பத்தினரும் சிங்கள அதிகாரிகளும் பாதுகாப்புடன் வந்து செல்லலாம், அப்படித்தானே?
என்று கேள்வி எழுப்பியதோடு சர்வேத அரசியலில் உணர்ச்சிக்கு இடமில்லை என்பதையும் சரியாகவே சுட்டிக்காட்டியிருந்தது.
 ‘இந்து’ நாளிதழின் தலையங்கம் (  http://www.thehindu.com/opinion/editorial/article3855340.ece ) தமிழக முதல்வரின் இந்தச் செயல் இந்திய நாட்டின் சனநாயகத்திற்கும் அதன் சகிப்புத்தன்மைக்கும் களங்கம் விளைவிப்பதாக உள்ளது என்று கூறி கண்டித்திருந்தது. ‘இந்து’ நாளிதழ் இச்செய்திகளைத் தொடர்ந்து முதல்பக்கத்தில் வெளியிட்டு முக்கியத்துவப்படுத்தியிருந்ததும் தாக்கப்பட்ட இலங்கையர்களிடம் நேர்காணல் செய்து அவர்களில் தமிழர்களும் இடம்பெற்றிருந்ததை ஆதாரப்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.
தமது சமூகப் பொறுப்பினை உணர்ந்து அரசின் தவறுகளை இடித்துரைத்த ‘தினமணி’ ‘இந்து’ நாளிதழ்கள் பாராட்டத்தக்கன. பிற ஊடக அமைப்புகளும் இத்தகைய செயல்பாடுகளை இனிவரும் காலங்களில் மேற்கொள்ளவேண்டும்.

1 comment:

  1. மேலே உள்ள கட்டுரையில் இலங்கைப் பயணிகளை விரட்டியடித்த அமைப்புகளைப் பற்றிக் கூற வரும்போது, "ம.தி.மு.க., நாம் தமிழர், விடுதலைச் சிறுத்தைகள்" என்று சொல்வதற்குப் பதில் தவறுதலாக, "ம.தி.மு.க., நாம் தமிழர்., விடுதலைப் புலிகள்" என்று கூறியிருந்தேன். இந்தப் பிழையை "கலகக்குரல்" வலைப்பக்கத்தினர் சுட்டிக்க்காட்டியிருந்ததை நண்பர்கள் கவனப்படுத்தினர்.தற்போது திருத்தியிருக்கிறேன். மற்றபடி, "கலகக்குரல்" சொல்லியிருப்பது போல விடுதலைப் புலிகள் மீதான வன்மத்தினால் இல்லாத ஒன்றை இட்டுக்கட்டுவதற்காக எழுதப்பட்டதல்ல. இது கவனக்குறைவால் நடந்த பிழை தான் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். தவறுக்கு வருந்துகிறேன்.

    "தினமணி" தலையங்கம் அப்படிச் சிறப்பாக எதையும் சொல்லிவிடவில்லை என்றும் எப்படியும் தமிழக மீனவன் செத்துப்போவது உறுதிதான் என்கிற ரீதியில் எழுதியிருப்பதாகவும் அவ்வலைப்பக்கத்தில் கூறப்பட்டிருந்தது. இப்படி மொத்தமாக ஒதுக்கிவிட முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. இருநாட்டு நல்லுறவுக்காக இலங்கை ராணுவத்திற்கு இந்தியாவில் பயிற்சி அளிப்பதைக் கூட சகித்துக்கொள்ளத்தான் வேண்டும் என்றும் ராஜபக்சேவின் குடும்ப உறவுகள் ராமதாரபுரம் வந்தாலும் (எதிர்ப்புகளைக் காட்டாமல்) பாதுகாப்போடு அனுப்புவதே சரி என்றும் கூறுவதையெல்லாம் ஏற்க இயலாது என்றபோதும் மேலே கூறியுள்ளபடி குறிப்பிடத்தக அம்சங்கள் அத்தலையங்கத்தில் இருப்பதாகவே நான் கருதுகிறேன். தினமணி தலையங்கத்தின் லிங்க் மேலே இணைக்கப்பட்டுள்ளது. தோழர்களும் படித்துப்பார்க்கலாம்.

    -- மீனா.

    ReplyDelete