Friday, September 14, 2012

கூடங்குளமும் ஊடக இருட்டடிப்புகளும் --மீனா


அணு உலையில் யுரேனியம் நிரப்புவதற்கு எதிராகக் கூடங்குளம் பகுதி மக்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை (9.9.12) நடத்திய போராட்டம் மற்றும் அதில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்கள் குறித்த ஊடகப்பதிவுகள் கவனிக்கப்படவேண்டியவையாக உள்ளன. நாம் நேரில் சென்று பார்க்காவிட்டாலும் எல்லா நாளிதழ்களில் சொல்லப்பட்ட செய்திகளையும் போராட்டக்குழுவினர் தரப்பில் சொல்லப்பட்ட செய்திகளையும் காவல்துறையினர் தரப்பில் சொல்லப்பட்ட செய்திகளையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது பெரும்பான்மை ஊடகங்கள் காவல்துறையின் சார்பாக மட்டுமே நின்று அவர்களின் செயல்பாடுகளுக்கு நியாயம் கற்பிக்கும் வகையிலேயே செயல்பட்டுள்ளதை அறியமுடிகிறது.கூடங்குளம் போராட்ட நிகழ்வுகளாக நம்மால் அறியப்படுபவை :

1. 9.9.12 ஞாயிற்றுக்கிழமை  போராட்டக்குழுவினர் உதயகுமார், புஷ்பராயன் ஆகியோர் தலைமையில் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கூடங்குளம் பகுதி மக்கள் அணிதிரண்டு கடற்கரை வழியாக அணு உலையை நோக்கி நடந்தனர்.

2.இது ஒரு அறவழிப்போராட்டம் என்பதை வெளிப்படுத்தும் வகையில் கைகளில் வெள்ளைக் கொடிகளை ஏந்தியபடி சென்றனர்.

3.அணு உலைக்கு 500 மீ தொலைவில் போலிசார் தடுத்து நிறுத்தியதும் கடற்கரை மணலிலேயே அமர்ந்து தங்கள் எதிர்ப்பை வெளிக்காட்டினர். போலீசின் தடையை மீறி அணு உலையை நோக்கிப் போக முற்படவில்லை.

4.கலெக்டர் செல்வராஜ், எஸ்.பி.விஜயேந்திர பிதரி இருவரும் கூறிய சமரச உடன்பாடுகளை ஏற்காத மக்கள் அன்றைய இரவு கடற்கரை மணலிலேயே தங்கினர்.

5.மறுநாள் (10.9.12) போராட்டத்திற்கு ஆதரவாகச் சுமார் பத்திற்கும் மேற்பட்ட படகுகளில் போராட்ட ஆதரவாளர்கள் வந்தனர். அதில் ஒரு படகு அணு உலையின் பின்பக்கம் சென்றிருக்கிறது. இதனைக் கவனித்த காவல்துறையினர் படகில் வந்த இருவரையும் பிடித்துவைத்துக் கொண்டனர். பதிலுக்குப் போராட்டக்காரர்களும் காவல்துறையினர் இருவரைப் பிடித்துவைத்துள்ளனர். பிறகு சமரசம் பேசப்பட்டு இருதரப்பினரும் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

6.கடற்கரையில் அமர்ந்து கொண்டிருந்த போராட்டக் குழுவினரிடம் தென்மண்டல ஐ.ஜி. ராஜேஷ்தாஸ் வழக்கம்போல அவருக்கே உரித்தான அதிகாரத்தோரணையில் பேசியிருக்கிறார். இதனால் கோபமடைந்த மக்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாய்த்தகராறு ஏற்பட்டு சிறிய கைகலப்பு நடந்திருக்கிறது.
7.இதனையடுத்து ஆத்திரமுற்ற காவல்துறையினர் வேகமாகக் கூட்டத்திற்குள் புகுந்து தடியடி நடத்தியும் கண்ணீர்ப் புகைக் குண்டுகள் வீசியும் மக்களை விரட்டியடித்திருக்கிறார்கள். மக்களும் இவர்கள் மீது கற்கள், செருப்புகள், கம்பிகளை எடுத்து வீசியிருக்கிறார்கள். இந்நிலையில் போராட்டக்குழுத் தலைவர் உதயகுமார், புஷ்பராஜன், ஜேசுராஜ் ஆகியோர் தயாராக நின்றிருந்த படகு ஒன்றில் ஏறி கடலுக்குள் சென்றிருக்கிறார்கள்.
8.இடிந்தகரைக்குள் நுழைந்த காவல்துறையினர் வீடுவீடாகப் புகுந்து சோதனை என்கிற பெயரில், வீட்டிற்குள் இருந்தவர்களைத் தாக்கிப் பொருட்களை சேதப்படுத்தியுள்ளனர். சுனாமி காலனி மக்கள் மீது கடும் தாக்குதல் தொடுக்கப்பட்டிருக்கிறது.
9.காவல்துறையின் தாக்குதலைக் கண்டித்து சுற்றுவட்டார மீனவ கிராமங்களும் போராட்டக்களத்தில் இறங்கின.  தீ வைப்பு சம்பவங்களும் சாலை மறியல்களும் போராட்டக்காரர்களால் நடத்தப்பெற்றன. அருகிலுள்ள கிராமம் ஒன்றில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டிற்கு மீனவர் அந்தோனி ஜான் பலியானார்.
10.வைராவிக்கிணறில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த காவல்துறையினர் இடிந்தகரைக்குள் புகுந்து அங்கு தேவாலய மேடையில்  அமர்ந்துகொண்டிருந்த பெண்களை அடித்து விரட்டியிருக்கிறார்கள். மாதாவின் சேலையை உருவி கீழேபோட்டு உடைத்திருக்கிரார்கள். தேவாலயத்திற்குள்ளேயே சிறுநீர் கழித்து ஆலயத்தின் புனிதத்தன்மையை அவமதித்திருக்கிறார்கள்.
11.நீண்டநேர கலவரத்திற்குப் பின்பு காவல்துறை திருப்பி அழைக்கப்பட்டது. இடிந்தகரையில் திரண்ட மக்கள் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்கள்.
12.மறுநாள் (11.9.12), கூடங்குளம் கிராமத்தில் நுழைந்த போலிசார் தெருத்தெருவாகச் சென்று கலவரத்தில் ஈடுபட்டதாகச் சொல்லி அடித்து உதைத்துப் பலரையும் கைது செய்திருக்கிறார்கள். இடிந்தகரையில் உள்ள வி.ஏ.ஓ. அலுவலகத்திற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்ததாகச் சொல்லப்படுகிறது. (எனினும் போராடும் மக்கள் இதை மறுத்துள்ளனர். காவல்துறைதான் இதைச் செய்தது என்கின்றனர்.)
13. மாலை 4.30 மணி அளவில் உண்ணாவிரத மேடைக்கு வந்த உதயகுமார் தான் கூடங்குளம் காவல்நிலையத்தில் சரணடைய இருப்பதாகக் கூறினார்.  ஆனால் கூடி இருந்த இளைஞர்கள் அவரை வலுக்கட்டாயமாகத் தூக்கிப் படகில் ஏற்றிக்கொண்டு சென்றுவிட்டார்கள்.
14. மறுநாள் (12.9.12), கூடங்குளம், சுனாமி காலனி, இடிந்தகரைப் பகுதிக்குள் புகுந்த காவல்துறையினர் முதல்நாள் கலவரத்தைத் தூண்டியதாகச் சொல்லி ஐம்பதிற்கும் மேற்பட்டவர்களை வளைத்துப் பிடித்திருக்கிறார்கள்.
15.கைது நடவடிக்கை, அதிரடிப்படை, விமானத்திலிருந்து கண்காணிப்பு, அருகில் உள்ள கிராம மக்களை ஒன்றிணைய முடியாதபடி தடுப்பு அரண்கள் போன்ற காவல்துறைச் செயல்பாடுகளால் போராட்டத்தை நசுக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
16. இன்று (13.9.12), சுமார் ஐந்தாயிரம் மக்கள் கடலில் இறங்கும் போராட்டத்தைத் துவக்கியிருக்கிறார்கள். போராட்டக்குழுத் தலைவர் உதயகுமாரைத் தேடப்படும் குற்றவாளியாகக் காவல்துறை அறிவித்துள்ளது..
இந்தச் செய்திகளை நாளிதழ்கள் வெளியிட்டுள்ள தன்மை :
தினமணி, தினத்தந்தி, தினமலர், தினகரன், The Hindu, Indian express, Times Of India, Deccan Chronicle ஆகிய தமிழகத்தின் முக்கிய நாளிதழ்கள் அனைத்தும் கூடங்குளம் போராட்டத்தை முதற்பக்கச் செய்தியாக வெளியிட்டு முக்கியத்துவப்படுத்திய போதும் செய்திகளின் நடுநிலைத்தன்மைக்கு அவை முக்கியத்துவம் அளிக்கவில்லை.
போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டதால் தவிர்க்க இயலாமல் போலிசார் தடியடியையும் கண்ணீர்ப் புகைக்குண்டுகளையும் துப்பாக்கிச் சூட்டையும் நடத்தினர் என்கிற பொருளிலேயே இவ்விதழ்கள் அனைத்தும் செய்தி வெளியிட்டுள்ளன. காவல்துறை நிகழ்த்திய வன்முறை இந்த அடிப்படையில் நியாயப்படுத்தப்பட்டுள்ளது.
போராட்டத்தில் திரண்டிருந்த மக்கள் கற்களையும் கம்பிகளையும் கொண்டு தாக்குவதை ஆதாரத்தோடு – புகைப்படத்தோடு வெளியிட்டிருந்த நாளிதழ்கள் அதேவேளையில், இடிந்தகரை தேவாலயத்தில் அமர்ந்துகொண்டிருந்த பெண்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியதையும் தேவாலயத்திற்குள் புகுந்து மாதா சிலையை உடைத்து, சிறுநீர் கழித்த அட்டூழியத்தையும் வீடு புகுந்து, வீதிகளில் இறங்கி நடத்திய அராஜகங்களையும் – காவல்துறையின் வன்முறை என்கிற பொருளில் – குறைந்தபட்சம் இரண்டுவரிச் செய்தியாகக் கூட வெளியிடவில்லை. ‘தினமணி’ நாளிதழில் மட்டும் மை.பா.ஜேசுராஜ் அவர்களிடம் எடுத்த நேர்காணலில் ‘மாதா சிலை உடைக்கப்பட்டது’ என்று  அவர் கூறியதை வெளியிட்டிருந்தது. (கலைஞர் தொலைக்காட்சியிலும் இது காட்டப்பட்டது. வார இதழ்களில் ‘நக்கீரன்’ கூடங்குளம் வன்முறை குறித்து ஓரளவு உண்மைச் செய்திகளை வெளியிட்டிருந்தது. தமிழின் முக்கிய நாளிதழ்கள் எவற்றிலும் சொல்லப்படாத “சிறுநீர் கழித்த செய்தியை” குறிப்பிட்டுச் சொல்லியிருந்தது. வார இதழ்கள் மற்றும் தொலைக்காட்சிகளை ஒப்பிட்டு  விரிவாக எழுதவேண்டியது அவசியம்.)
திருச்செந்தூர் மாவட்டத்தில் போராட்டக்காரர்கள் சிலர் சுங்கச் சாவடிக்குத் தீ வைத்தபோது அங்குவந்த போலிசார் மீது நாட்டுவெடிகுண்டை வீசியதாகவும் இதில் 4 போலிசார் காயமடைந்ததாகத் தெரிவதாகவும் தினமணி நாளிதழ் குறிப்பிட்டுள்ளது. வேறெந்த நாளிதழ்களிலும் வெளிவராத இந்தச் செய்தியின் உண்மைத்தன்மை மீது ஐயம் ஏற்படுகிறது.
திங்கட்கிழமையன்று நடைபெற்ற கலவரத்தில் பள்ளி மாணவர்கள் போலிசார் மீது கற்கள் மற்றும் பாட்டில்களை வீசித்தாக்கினர் என்று குறிப்பிட்டுள்ள “தினகரன்” நாளிதழ் தொடர்ந்து காவல்துறை வீடுபுகுந்து தாக்கியும் பொருட்களைச் சேதப்படுத்தியும் நிகழ்த்திய அராஜகத்தனங்களைக் குறித்து வாய்திறக்கவேயில்லை.
11.9.12 அன்று வெளிவந்த ‘தீக்கதிர்’ நாளிதழ் அணு உலை எதிர்ப்புக்குழுவினர் குறித்து இப்படிச் செய்தி வெளியிட்டுள்ளது : “ஆனால் போலிசார் தடியடி நடத்தத் தொடங்கியதும் கடலோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஃபைபர் கிளாஸ் படகில் ஏறி அணு உலை எதிர்ப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார், புஷ்பராயன், மை.பா மற்றும் சில நிர்வாகிகள் அங்கிருந்து முதல் ஆளாகத் தப்பினர்”
மக்கள் போராட்டங்களை ஆதரிக்க வேண்டிய  இடதுசாரிக்கட்சிகள் (இங்கு C.P.M), போராட்டச்சூழலைப் புரிந்துகொள்ளாமல்  செய்திகளை   வெளியிட்டுள்ளது வருந்தத்தக்கது. அடுத்த நாள் நிகழ்வுகளைக் கொண்டுபார்க்கும் போது அவர் படகில் சென்றதில் மக்களுக்கும் பங்கிருக்கும் என்றே தோன்றுகிறது. ஆனால் இதனைக் கணக்கிலெடுக்காமல், இன்றைய (13.9.12) தீக்கதிர் நாளிதழிலும் உதயகுமார் தப்பியோடியதாகக் கிண்டலடித்திருப்பது கண்டிக்கத்தக்கது.

மக்கள் மீதான தாக்குதல்களுக்கு மட்டுமல்ல, பத்திரிக்கைத்துறையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கும்கூட நாளிதழ்கள் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. கூடங்குளம் அணு உலை அருகே போராட்டக்காரர்களுக்கும் போலிசாருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றபோது அந்நிகழ்வைப் படம்பிடிக்கச் சென்ற சத்யம் தொலைக்காட்சி கேமராமேன் ஜஸ்வந்த்சிங்கை போலிசார் கடலில் தூக்கி வீசியிருக்கின்றனர். அவருடைய கேமராவும் கடலில் வீசப்பட்டது. கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த அவரைப் போராட்டக்காரர்கள் தான் மீட்டிருக்கிறார்கள். மோதலின்போது ஆங்கிலத் தொலைக்காட்சி ஒன்றின் நிருபரது கேமராவையும் போலிசார் அடித்து நொறுக்கியிருக்கிறார்கள். அவர் தலையிலும் காயம் ஏற்பட்டிருக்கிறது.
காவல்துறையின் இந்த வன்முறை குறித்த செய்தியை ‘தினமணி’ நாளிதழில் தான் பார்க்கமுடிகிறது.  இப்படியான உரிமை மீறல்களுக்கு வழமையாக எழுப்பும் கண்டனக்குரல்களைக் கூட - தினமணி உட்பட - எந்த முதன்மை நாளிதழும் எழுப்பவில்லை.   தினமணி இந்தத் தாக்குதல் சம்பவத்தை வெளியிட்டதோடு, வைராவிக்கிணறு சாலையை போராட்டக்காரர்கள் தோண்டித் தடையை ஏற்படுத்தியபோது அதனைப் படம்பிடிக்கச் சென்ற பத்திரிக்கையாளர்களைப் போராளிகள் விரட்டியடித்ததையும் பத்திரிக்கையாளர்களின் இருசக்கர வாகனங்களை அவர்கள் அடித்துநொறுக்கியதையும் குறிப்பிட்டுள்ளது.
தினமலர் நாளிதழ், “கடற்கரையில் கலவரத்தைப் படம்பிடித்த நிருபர்கள் சிலர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. ஆங்கிலத் தொலைக்காட்சி நிருபர் ஒருவரின் கேமராவும் நொறுங்கியது” என்று பொத்தாம் பொதுவாகச் சொல்லியுள்ளது. அதேவேளையில், உண்ணாவிரத மேடையில் இருந்து குண்டுக்கட்டாகத் தூக்கிச் செல்லப்பட்ட உதயகுமார் படகில் புறப்பட்டதைப் படம்பிடித்தபோது சுற்றியிருந்த போராட்டக்குழுவினர் கொலைமிரட்டல் விடுத்தார்கள் என்கிறது. Deccan Chronicle இதழும் ‘ 3 பத்திரிக்கையாளர்கள் இந்தக் கலவரத்தில் காயமடைந்தனர்’ எனப் பொதுவாகச் சொல்லியுள்ளது.
இந்தக் கார்ப்பரேட் ஊடகங்களின் செய்திகளைத் தொகுத்துப் பார்க்கும்போது, அணு உலை ஆதரவு அல்லது அரசிற்கு ஆதரவு என்னும் நிலைப்பாட்டிலேயே இவை செயல்பட்டுள்ளது வெளிப்படையாகிறது. எனினும் ஒரே ஒரு இதழைத் தவிர (தினமலர்) பிற இதழ்கள் அனைத்தும் ஊடக நெறி, ஊடக நேர்மை என்னும் அறங்களைக் குறைந்தபட்சமேனும் பின்பற்றி, மாற்றுக்கருத்துடையவர்கள் பற்றிய செய்திகளைப் பண்புடன் வெளியிட்டுள்ளன. ஆனால் இந்த ஊடக அறங்களை எல்லாம் துச்சமெனக்கருதி மாற்றுக்கருத்து உடையவர்கள் குறித்து உண்மைக்குப் புறம்பான செய்திகளைத் திட்டமிட்டுக் கட்டமைப்பதையும் தரக்குறைவான வார்த்தைகளால் வசைபாடுவதையும் முதன்மைக் கடமையாகச் செய்துள்ளது “தினமலர்” . கடந்த ஓராண்டுகாலமாக அறவழியில் போராடிவரும் கூடங்குளம் மக்கள் மீது, அரசையும் காவல்துறையையும் கூட மிஞ்சும் வகையில் “தினமலர்” அவதூறு செய்து வருவதை அறிவோம். போராட்டக்குழுவினரை ‘அமெரிக்கக் கைக்கூலிகள்’ என்றும் ‘கிறிஸ்துவ தேவாலயப் பின்னணி’ கொண்டவர்கள் என்றும் வெளிநாட்டில் இருந்து காசு பெறுபவர்கள் என்றும் அவதூறு செய்து வந்ததோடு போராட்டத்தில் பெண்களின் பங்கெடுப்பையும் தொடர்ந்து இழிவுபடுத்திவந்தது. போராளிகளை ‘உ.குமார் கும்பல்’ என்று சொல்லாடி காழ்ப்பை வெளிப்படையாகக் கக்கியது.
மொத்தத்தில் உண்மை, நேர்மை, நடுநிலைமை என்னும் ஊடக அறங்களைக் கூடங்குளம் போராட்டச் செய்திகளில் ஒட்டுமொத்தமாய்க் கைவிட்ட ‘தினமலர்’ கடந்த இரண்டு நாட்களிலும் நடைபெற்ற கலவரம் குறித்த செய்திகளில் மேலும் தரம் தாழ்ந்துபோய் தன்னை அம்மணமாக்கிக் கொண்டுள்ளது.
12.9.12 அன்று வெளியான வேலூர் மாவட்டப் பதிப்பில் “போலிசைத் தாக்க வெடிகுண்டுகள் தயார்” என்னும் துணைத்தலைப்பில் பின்வரும் அவதூறுச் செய்தியை ‘தினமலர்’ வெளியிட்டுள்ளது : “ஏற்கனவே உண்ணாவிரதப் பந்தலில் உ.குமார் பேசிய பேச்சு அடிப்படையில் தற்காப்புக்காக ஆயுதங்களை இடிந்தகரை மக்கள் தயார் செய்து வைத்திருந்த தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து இடிந்தகரைப் பகுதியைச் சேர்ந்த ஆனால், போராட்டத்தில் பங்கேற்காத சிலர் கூறும்போது, ‘ஏற்கனவே இந்தப் பகுதியில் உள்ள போராட்டக்காரர்கள் பலர் நாட்டுவெடிகுண்டு உட்பட பல பயங்கர ஆயுதங்களைத் தயார் செய்து, இருப்பு வைத்துள்ளனர். முற்றுகைப் போராட்டத்துக்குச் சென்றவர்கள் தாங்கள் தயார் செய்துவைத்திருந்த வெடிகுண்டுகளைக் கையோடு எடுத்துச் சென்றிருந்தால், பாதுகாப்புப் பணிக்கு வந்த போலிசாரில் ஒருவர் கூட உயிரோடு சென்றிருக்க முடியாது. அதேநேரத்தில், உ.குமார் உத்தரவிட்டால் இடிந்தகரை மக்கள் ஆயுதங்களுடன் போராடக்களம் இறங்குவார்கள். அந்தளவுக்கு அவர்களை உ.குமார் மூளைச்சலவை செய்துவைத்துள்ளார் என்றனர்.”
12.9.12 அன்று வெளியான சென்னைப் பதிப்பில், “உதயகுமாரிடம் காசுவாங்கிக் கொண்ட பெண்கள், பொதுமக்கள் அணு உலைக்கு எதிரான போராட்டத்தை இடிந்தகரையில் வழக்கம்போலத் தொடர்ந்தனர்” என்று ‘செய்தி’ வெளியிட்டது.
இன்றைய (13.9.12) வேலூர்ப் பதிப்பில், “போராட்டத்தைத் தூண்டிவிடும் உ.குமாரை அப்பகுதி மக்கள் சரணடையவிடாமல் தடுத்து நிறுத்தி எங்கோ அழைத்துச்சென்று தனிமையில் தங்கவைத்துள்ளனர். போராட்டத்தை முன்னின்று நடத்தியவர் தலைமறைவாகிவிட்டதால் வன்முறைச் சம்பவங்கள் தானாகத் தணிந்தன” என்று சொல்லியிருக்கிறது.
காவல்துறை கூடச் சொல்லக்கூசும் பொய்களை ‘தினமலர்’ தனது ஊடகத் திமிரைப் பயன்படுத்தி வெளியிட்டுவருகிறது. மக்கள் போராட்டங்களை இப்படித் தனது விருப்பு வெறுப்புகளின் அடிப்படையிலும் ‘கண்டுபிடிப்புகளின்’ அடிப்படையிலும் வரையறுத்து, ‘செய்தி’ என்கிற பெயரில் கக்கும் ‘தினமலரின்’ இச்செயல்பாடு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ‘தினமலர்’ தன் இழிநிலையை திருத்திக்கொள்ள முயற்சிக்க வேண்டும்.
உதயகுமாரைக் குறிக்கும் இடத்திலெல்லாம் “உ.குமார்” எனக் குறிப்பிடுவதும் கவனிக்கத்தக்கது. ‘உதய’ என முழுசாக எழுதினால் ‘த, ய’ என்னும் இரண்டு எழுத்துக்கள் மட்டுமே கூடுதலாகிறது. ‘உ’ வுக்குப் பக்கத்தில் வைக்கப்பட்டுள்ள புள்ளியையும் கணக்கிட்டால் இப்படிச் சுருக்குவதால் ஒரு எழுத்து மட்டுமே குறைகிறது. ஆக. சுருக்குதல் என்பது தினமலரின் நோக்கமல்ல. வேறு எந்தப் பெயரையும் அது இப்படிச் சுருக்கி வெளியிடுவதுமில்லை. ராமசுப்பையர் என்கிற பெயரைவிடவா உதயகுமார் என்கிற பெயர் நீளமாக உள்ளது? உதயகுமாரைக் கேலி செய்யும் நோக்குடனேயே தினமலர் இப்படி எழுதுகிறது. தனக்குக் கீழ் உள்ள சாதியினர் எத்தனை அழகாகப் பெயர்கள் வைத்துக் கொண்டாலும் அதைச் சிதைத்துக் கூப்பிடும் உயர் சாதித் திமிரையே இது வெளிப்படுத்துகிறது.
கூடங்குளம் போராட்டம் மற்றும் காவல்துறையின் அத்துமீறல்களைப் பொருத்தமட்டில், நம்பகமான ஒரு உண்மை அறியும் குழு நேரில் சென்று ஆய்வு செய்து பார்த்த பின்பே துல்லியமாக உண்மைகளை அறிந்துகொள்ள முடியும் என்ற நிலை இருக்கிறது. சனநாயகத்தின் தூண்களாக இருக்கவேண்டிய ஊடகங்கள் உண்மைகளை இருட்டடிப்பு செய்து, மக்கள் போராட்டங்களுக்குத் தோள்கொடுக்காமல் அரச அதிகாரங்களுக்குத் துணை போவது வருத்ததிற்கும் கண்டனத்திற்கும் உரியது. ஊடகங்கள் ஒரு சுயவிமர்சனத்திற்குத் தயாராக வேண்டும்.
(தினமலரின் ஊடக அத்துமீறல்களைக் காண : )
 
 


 

Monday, September 10, 2012

Jayalalitha's Cartoon - A Shame On Journalism

Gavanikkirom stongly condems the cheap and vulgour cartoon published againts Jayalalitha and Manmohan Singh in sunday weekly epaper (9th Sep) Lakbima news from Srilanka.We assume its a knee-jerk reaction to Jayalalitha's decision to send back the srilankan football team from chennai and her voice againts Srilankan army forces getting trained in taminadu.This kind of indecent portrayal in any form is a shame on journalist community and cannot be tolerated.

Since internet being a paced medium, the need of the hour is the secretary of Information Technology, Govt. of India to send a immediate order to all Internet Service Provider (ISP) to block Lakbima epaper website until the cartoon is removed and direct all media and social networking sites to block posting the cartoon.We urge the Govt. of Tamilnadu and Govt. of India to summon the high commissionor of Srilanka for an immediate action to remove the cartoon from Lakbima epaper and take severe action againts the editor and the cartoonist Hasantha Wijenayake.Despite all ideological differences, all political parties,journalist groups  should condemn this act of dirty journalism. As a sensible journalist community we request the media and social networking groups not to republish the cartoon.

Thursday, September 6, 2012

இலங்கைப் பயணிகள் விரட்டப்பட்டதும் ஊடகப்பதிவுகளும் --- மீனா


தமிழகக் கால்பந்து அணிகளுடன் நட்புரீதியிலான விளையாட்டுகளில் பங்கேற்க வந்த இலங்கைக் கால்பந்து வீரர்களைத் (கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள்) தமிழக முதல்வர் ஜெயலலிதா திருப்பி அனுப்பியுள்ளார். மேலும் நேரு விளையாட்டரங்கில் போட்டிகளை நடத்த அனுமதித்த விளையாட்டரங்கப் பொறுப்பு அதிகாரியைத் தற்காலிகப் பணிநீக்கம் செய்ததோடு துறைரீதியான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக அரசின் இந்தச் செயல் ஒருபுறம் இருக்க, பூண்டி மாதா கோயில், வேளாங்கண்ணி ஆகிய இடங்களுக்குப் புனிதயாத்திரைக்காக வந்திருந்த சிங்களர்களை ம.தி.மு.க, நாம் தமிழர், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய அமைப்பினர் விரட்டியடித்துள்ளனர். சுற்றுலாவிற்காக வந்த அம்மக்களுள் தமிழ்பேசும் இலங்கைத் தமிழர்களும் இருந்தது குறிப்பிடத்தக்கது. அமைப்புகளின் கடும் எதிர்ப்பால், புனித யாத்திரை வந்திருந்த 178 பேரையும் இலங்கைக்குத் திருப்பி அனுப்புவதற்காக சிறப்பு விமானம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. திருச்சி விமான நிலையத்திற்கு 7 வேன்களில் போலிஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டபோது, காட்டூர் அருகே  பத்துக்கும் மேற்பட்டோர் கொண்ட அடையாளம் தெரியாத கும்பல் வாகனங்களை மறித்து கற்கள் மற்றும் உருட்டுக்கட்டைகளால் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியுள்ளது. பதட்டமான அந்தச் சூழ்நிலைக்குப் பின் பலத்த பாதுகாப்புடன் அவர்கள் விமானநிலையம் அழைத்துச் செல்லப்பட்டு இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

சமீப நாட்களில் பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் செய்திகளுக்கு ஊடகங்கள் பலவும் முக்கியத்துவம் அளித்திருந்தன. எனினும் பல முக்கிய ஊடகங்களும் இவற்றை ஒரு செய்தியாகவே பரிமாறி இருந்த நிலையில் ‘தினமணி’ மற்றும் ‘இந்து’ நாளிதழில் வெளிவந்த தலையங்கங்கள் தமிழக அரசின் இந்தச் செயலைக் கண்டித்து, அதன் விளைவுகளைச் சுட்டிக்காட்டி, ஊடகத்துறைக்கான பொறுப்புகளோடு செயல்பட்டிருந்தன. அவற்றைக் குறித்துப் பார்க்கும் முன் சில செய்திகளைப் பகிர்ந்துகொள்ள வேண்டும்.


 கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி தமிழகம் வந்திருந்த ராயல் கல்லூரி (கொழும்பு) கால்பந்தாட்ட வீரர்கள், ஆகஸ்ட் 31 ஆம் தேதி சென்னை சுங்க இலாகா அணியுடன் நேரு விளையாட்டரங்கில் நட்புரீதியான போட்டிகளில் பங்கேற்றுள்ளனர். இதனை அறிந்த தமிழக முதல்வர் இந்தச் செயலை வன்மையாகக் கண்டித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார் :

 (இலங்கை ராணுவ வீரர்களுக்குத் தொழில்நுட்பப் பயிற்சி அளித்து தமிழக மக்களின் உணர்வுகளை மத்திய அரசு புண்படுத்தும்) “இந்தச் சூழ்நிலையில், இலங்கையைச் சேர்ந்த கால்பந்து விளையாட்டு வீரர்கள், தங்களுடைய திறமையை வளர்த்துக் கொள்ளும் வகையில், நட்பு ரீதியிலான போட்டிகளில் கலந்து கொள்ள தமிழகம் வர மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மத்திய அரசின் இந்தச் செயல் தமிழக மக்களை அவமானப்படுத்தும் செயல் ஆகும். மத்திய அரசின் இந்தச் செயலுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 தனக்கு இல்லாத அதிகாரத்தை பயன்படுத்தி இலங்கை விளையாட்டு வீரர்களை நேரு விளையாட்டரங்கில் கால்பந்து விளையாட அனுமதி அளித்ததன் மூலம் தமிழக மக்களின் உணர்வுகளை நேரு விளையாட்டரங்க பொறுப்பு அதிகாரி கொச்சைப் படுத்தியுள்ளார்.
எனவே, அந்த அதிகாரியை தற்காலிக பணிநீக்கம் செய்து துறைரீதியான நடவடிக்கை எடுக்கும்படி தலைமைச் செயலாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இலங்கை கால்பந்து வீரர்களுக்காக எந்த போட்டிகளும் தமிழகத்தில் நடத்தக் கூடாது என்றும், அவர்களை இலங்கைக்கு உடனடியாக திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதே போன்று வேலம்மாள் மேல்நிலைப் பள்ளியுடன் கால்பந்து போட்டி விளையாட சென்னை வந்துள்ள இலங்கை, ரத்தினபுராவைச் சேர்ந்த ஹில்பர்ன் இன்டர்நேஷனல் பள்ளியின் 8 மாணவர்கள் மற்றும் ஒரு பயிற்சியாளரையும் திருப்பி அனுப்ப உத்தரவிட்டுள்ளேன்.”
அப்பாவித் தமிழர்களைக் கொத்துக் குண்டுகள் எறிந்து கொன்று குவித்த இலங்கை ராணுவத்திற்கு தமிழகத்திலோ இந்தியாவிலோ பயிற்சி அளிக்கக் கூடாது என்று எழுப்பப்படும் முழக்கங்களை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. அப்பட்டமான இனவெறித்தன்மை கொண்ட ராஜபக்சவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதும் கருப்புக்கொடி காட்டுவதுமான செயல்பாடுகளுக்குப் பின் உள்ள தமிழரது உணர்வுகளை ஏற்றுக்கொள்ள முடிகிறது. ஆனால் இலங்கை அரசாங்கம் புரிந்த குற்றங்களின் அடிப்படையில் இலங்கையின் ஒட்டுமொத்த சிவில் சமூகத்தின் மீதும் வெறுப்பை உமிழ்வதை எந்தவகையில் ஒப்புக்கொள்வது? ராஜபக்சவின் போர்க் குற்றங்களுக்கும் இனவெறிச் செயல்பாடுகளுக்கும் அப்பாவி இலங்கைக் குடிமக்களும் பொறுப்பேற்க வேண்டுமென்றால் காங்கிரஸின் அமெரிக்கக் கைக்கூலித்தனத்திற்கும் பா.ஜ.க.வின் இந்துத்துவ அரசியலுக்கும் நாம் பொறுப்பேற்கத் தயாரா?
இலங்கையின் சொந்த மக்களான தமிழர்கள் இரண்டாந்தர குடிமக்களாக நடத்தப்படும் அவலத்தைக் கண்டு நரம்பு புடைக்க வீறிட்டெழும் தமிழ் அமைப்புகளும் அரசியல்வாதிகளும் தமிழகத்தில் ஒருவேளைச் சோற்றுக்கும் ஒரு கூரை வீட்டிற்கும் அல்லல்படும் அகதிகளைக் குறித்து வாய்திறக்கத் தயாரா? அவ்வளவு ஏன், அன்றாடம் பற்றி எரிகிற சொந்தத்தமிழர்களின் குடிசைகள் பக்கம் எட்டியேனும் பார்க்கத் தயாரா?
சிறப்பு முகாம்களில் கைதிகளாக அடைத்து வைக்கப்பட்டிருக்கும் ஈழத்தமிழர்களின் மீது போடப்பட்டுள்ள வழக்குகளைத் திரும்பப்பெறுதல் அல்லது விரைந்து நடத்தி முடித்து அவர்களை விடுதலை செய்தல் என்பதான கோரிக்கைகளுக்கு முதல்வர் ஜெயலலிதா செவிமடுப்பதாகத் தெரியவில்லை. சிறப்பு முகாம்களில் இருந்து திறந்தவெளி முகாம்களுக்கு மாற்றவேண்டும் என்ற நியாயமான கோரிக்கையை முன்வைத்து அறவழியில் உண்ணாவிரதம் இருந்த ஈழத்தமிழர் செந்தூரன் மீது ‘தற்கொலை முயற்சி’ என்று இன்னொரு குற்றம் சுமத்தி புழல் சிறையில் அடைத்திருக்கிறார். ஆனால் இன்று தமிழர்களுக்குத் துரோகம் இழைத்த இலங்கையின் மீது பொருளாதாரத்தடை விதிக்க வேண்டும் என்றும் கால்பந்து விளையாட்டு வீரர்களைக்கூட தமிழகத்திற்குள் நுழையவிடக் கூடாதென்றும் அவர் கொதித்தெழுவதை எப்படிப் புரிந்துகொள்வது?
தமது சொந்த அரசியல் தேவைகளுக்காகவும் லாபங்களுக்காகவும் இலங்கைக்கு எதிரான போர்க்கொடியை இறுக்கிப்பிடிக்கும் அரசியல் அமைப்புகளும் தமிழரின் நலன்களுக்காக குரலுயர்த்தும் அமைப்புகளும் தற்போது சிவில் சமூகத்திற்கே எதிராகத் திரும்பி இருப்பது வருந்தத்தக்கது. நான்காம்கட்டப் போர் முடிந்து ஒரு மயான அமைதி உலவிக்கொண்டிருக்கும் இன்றைய சூழலில் சிங்கள – தமிழ்ச் சமூகங்களுக்கு இடையே பகைமறப்பைத் தோற்றுவிப்பதும் நேசங்களை உற்பவிப்பதும் தமிழர் நலனில் அக்கறை கொண்ட – சமூக நல்லுறவுகளின் மீது அக்கறை கொண்ட ஒவ்வொருவரின் கடமை.
தமிழகத்திற்கு விருந்தினர்களாக – புனித யாத்திரைப் பயணிகளாக வந்தவர்களை இப்படித் திருப்பி அனுப்பியிருப்பது மோசமான பின்விளைவுகளுக்கே இட்டுச்செல்லும். இளம் தலைமுறையினரிடமும் பொது மக்களிடமும் இப்படிக் கசப்புணர்வுகளை ஏற்படுத்துவது ஆபத்தானது. சிங்கள மக்கள் அனைவரையும் ராஜபக்சவின் ராணுவப் படையினராக - ஒருபடித்தானவர்களாகப் பார்க்கும் அபத்தித்திலிருந்தே இந்தத் தவறுகள் நிகழ்கின்றன. நான்காம் கட்டப்போர் உச்சகட்டத்தில் இருந்த சூழலில் இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களை வெட்ட வெளிச்சமாக்கியதில் சிங்களப் பத்திரிக்கையாளர்களுக்கும் சிங்கள- மனித உரிமை ஆர்வலர்களுக்கும் மிகமுக்கியப் பங்கிருந்ததை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. இலங்கை அரசை எதிர்த்து நின்றதற்காக அவர்கள் பழிவாங்கப்பட்டதும் சிலர் கொல்லப்பட்டதும், பலர் உயிருக்கு அஞ்சித் தப்பியோடியதும் எண்ணிப்பார்க்க வேண்டியது.இவற்றையெல்லாம் கணக்கிலெடுக்காமல் தமிழக அரசியல் அமைப்புகள்  நிகழ்த்தியுள்ள செயல்கள் கண்டிக்கத்தக்கன. மனித உரிமை அமைப்புகளும் சமூக ஆர்வலர்களும் இதன்மீதான தமது கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.
 மேலே கூறியுள்ளபடி, ஊடகங்கள் பலவும் இதனை ஒரு செய்தியாகவே பதிவு செய்திருந்த நிலையில் ‘தினமணி’ மற்றும் ‘இந்து’ நாளிதழில் வெளிவந்த தலையங்கங்கள் (செப்.4) தமிழக அரசின் செயலைக் கண்டித்திருந்ததன் மூலம் தனது ஊடகப் பொறுப்பினை வெளிக்காட்டியிருக்கின்றன.
 “தேவை நிதானம் ஆத்திரமல்ல” ( http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Editorial&artid=655164&SectionID=132&MainSectionID=132&SEO=&Title=)என்ற தலைப்பில் வெளிவந்த தினமணி தலையங்கம், “இலங்கைத் தமிழர் மீது மிக வன்மையான தாக்குதல் நடைபெற்ற நாளில், இலங்கை கிரிக்கெட் அணி இந்திய அணியுடன் விளையாடியது. அவர்களைத் திருப்பி அனுப்பவில்லை. இந்திய அணி இலங்கையில் விளையாடியது. தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் இந்த ஆட்டத்தில் பங்கேற்கக்கூடாது என்று நாம் கேட்கவும் இல்லை. இந்திய-இலங்கை அணியின் கிரிக்கெட் விளையாட்டைத் தமிழ்நாட்டிலுள்ள தொலைக்காட்சிச் சேனல்கள் ஒளிபரப்பக்கூடாது என்று தடை விதிக்கவில்லை. தமிழகத்தைச் சேர்ந்த ஆன்மிகவாதிகள், திரைப்பட நட்சத்திரங்கள் டி.எம். கிருஷ்ணா உள்ளிட்ட கர்நாடக சங்கீதக் கலைஞர்கள் இலங்கைக்குச் சென்று வந்ததை யாரும் தவறாகக் கருதவில்லை. அப்படியிருக்கும்போது, யாருமே கேள்விப்படாத கால்பந்து அணிக்கு மட்டும் ஏன் இத்தகைய எதிர்வினை?”
“.......அப்படியானால் இலங்கைத் தமிழரைத் தவிர வேறு யாரும் இலங்கையிலிருந்து தமிழ்நாட்டுக்கு வரக்கூடாதா? பயிற்சிக்காக இலங்கை மருத்துவர்கள் இங்கே வரக்கூடாது. சிகிச்சைக்காக சிங்களத்தவர் வரக்கூடாது. படிப்புக்காக மாணவர்கள் வரக்கூடாது. விளையாட வரக்கூடாது. சாமி கும்பிட வரக்கூடாது. புத்தகயாவில் சிங்களவர் நுழையத் தடை விதிக்க வேண்டும். ஆனால், ஈழத்தமிழர்களின் வாழ்வைக் குலைத்த ராஜபட்சயும் அவரது குடும்பத்தினரும் சிங்கள அதிகாரிகளும் பாதுகாப்புடன் வந்து செல்லலாம், அப்படித்தானே?
என்று கேள்வி எழுப்பியதோடு சர்வேத அரசியலில் உணர்ச்சிக்கு இடமில்லை என்பதையும் சரியாகவே சுட்டிக்காட்டியிருந்தது.
 ‘இந்து’ நாளிதழின் தலையங்கம் (  http://www.thehindu.com/opinion/editorial/article3855340.ece ) தமிழக முதல்வரின் இந்தச் செயல் இந்திய நாட்டின் சனநாயகத்திற்கும் அதன் சகிப்புத்தன்மைக்கும் களங்கம் விளைவிப்பதாக உள்ளது என்று கூறி கண்டித்திருந்தது. ‘இந்து’ நாளிதழ் இச்செய்திகளைத் தொடர்ந்து முதல்பக்கத்தில் வெளியிட்டு முக்கியத்துவப்படுத்தியிருந்ததும் தாக்கப்பட்ட இலங்கையர்களிடம் நேர்காணல் செய்து அவர்களில் தமிழர்களும் இடம்பெற்றிருந்ததை ஆதாரப்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.
தமது சமூகப் பொறுப்பினை உணர்ந்து அரசின் தவறுகளை இடித்துரைத்த ‘தினமணி’ ‘இந்து’ நாளிதழ்கள் பாராட்டத்தக்கன. பிற ஊடக அமைப்புகளும் இத்தகைய செயல்பாடுகளை இனிவரும் காலங்களில் மேற்கொள்ளவேண்டும்.