Saturday, June 30, 2012

மரணதண்டனைக் கைதிகள் மன்னிப்பு : கொச்சைப்படுத்தும் தினமணி

குடியரசுத்தலைவர் பிரதீபா பாட்டீல் தனது  5 ஆண்டு பதவிக்காலத்தில் 35 பேருக்குத் தூக்குத்தண்டனையை ரத்து செய்தது  குறித்த அறிவிப்பு ஊடகங்களின் கவனத்தைப் பெருமளவு ஈர்த்திருந்தது. அனைத்து ஊடகங்களுமே அந்தச் செய்தியை ரொம்பவும் முக்கியத்துவப்படுத்தின.
இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமைக்குரிய பிரதீபா,  தனது இந்தப் புகழுக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக இத்தனைப் பேருக்குக் கருணை காட்டியிருப்பது வரவேற்கத்தக்கது. ராஜீவ்காந்தி கொலைவழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவருடன் சேர்த்து ஐந்து பேரின் கருணை மனுவை பிரதீபா நிராகரித்தது வருந்தத்தக்கதுதான். எனினும் முன்னெப்போதும் இல்லாத வகையில் 5 ஆண்டு காலத்தில் 35 பேரை விடுவித்தது மனமுவந்து பாராட்டத்தக்கது. இந்த 35 பேரில் 23 பேர் தமது கருணை மனுவைக் குடியரசுத்தலைவரிடம் கொடுத்த ஆண்டு : 1981.


உலகநாடுகளில் மொத்தம் 134 நாடுகள் மரண தண்டனைஎன்னும் மனித உரிமை மீறலைஅரசியல் சட்டத்திலிருந்து ஒழித்துள்ளன. ஆனால் இந்தியா, அமெரிக்கா,சீனா உள்ளிட்ட நாடுகளில்மரணதண்டனை என்பது அங்கீகரிக்கப்பட்ட அரசியல்சட்டமாக இருக்கிறது. உலகமெங்கும் மரணதண்டனை நிறுத்திவைக்கப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை .நா. சபை நிறைவேற்றியபோது அதற்கு எதிராக வாக்களித்தநாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்தது. இந்தியாவில் மரணதண்டனை நிறைவேற்றப்படுவது அரிதாக இருந்தாலும் மரணதண்டனைவிதிக்கப்படுவது அப்படியொன்றும் அரிதானதில்லை. தண்டனை உறுதி செய்யப்பட்டவர்களுக்குகருணை மனு கோரும் இறுதிவாய்ப்பு இருக்கிறதெனினும், அப்படியான மனுக்களின் மீது அவ்வளவு எளிதில்நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை ; கருணையும் காட்டுவதில்லை. இப்படியாக தொடர்ந்து மரணதண்டனைக்கு ஆதரவளித்துவரும் இந்திய நாட்டின் வரலாற்றில்,பிரதிபா பாட்டிலின் இந்தச் செயலானது குறிப்பிடத்தக்க சாதனையாகவேஅமைந்திருக்கிறது.

 
இந்தச் செய்தி குறித்து “செயற்கரிய சாதனை” என்னும் தலைப்பில் தினமணி நாளிதழ் 22.6.12 அன்று ஒரு தலையங்கம் தீட்டியிருந்தது.1 பிரதீபா பாட்டிலின் இந்தச் சாதனை பெருமைப்படத்தக்கதுதானா என்ற சந்தேகத்தை எழுப்பி, பிரதீபாவுக்கு முன்பு,  குடியரசுத் தலைவர்களாய் இருந்த (ஒரே ஒரு குற்றவாளியைக் கூட கருணை அடிப்படையில் மன்னிக்காத) கே.ஆர்.நாராயணன், (இரண்டு பேருக்கு மட்டுமே மரண தண்டனையை ரத்து செய்யக் கையொப்பமிட்ட) அப்துல்கலாம் ஆகியோரின் ‘சனநாயகப் பண்பைச்’ சுட்டிக்காட்டி, மரணதண்டனையில் இருந்து விடுவிக்கப்பட்டவர்களின் கொடூர குற்றங்களை எல்லாம் நெஞ்சுறையும்படி விளக்கி இறுதியாக இந்தச் சாதனையை அதிகார துஷ்பிரயோகம் என்பதாக அத்தலையங்கம் கண்டித்தது.மத்திய உள்துறை அமைச்சகத்தின் சிபாரிசின் பேரில்தான் குடியரசுத் தலைவர் கருணை அடிப்படையில் மன்னிப்பு வழங்குகிறார் என்றாலும், மன்னிப்பு வழங்காமல் தவிர்ப்பதற்கு தனக்குள்ள உரிமையை அவர் பயன்படுத்தாததைக் கண்டுகொந்தளித்தது.
மேலும், தூக்குதண்டனை உள்ளிட்ட எல்லா தண்டனைகளின் மீதும் முடிவெடுக்கும் அதிகாரத்தைக் குடியரசுத் தலைவருக்கு வழங்கிய அரசியல் சட்டம் ,அதேவேளையில் இந்த அதிகாரம் விலைபேசப்பட்டால் அதுகுறித்து கேள்வி கேட்கும் உரிமையை உச்சநீதிமன்றத்திற்கு  வழங்கியிருப்பதாகச் சுட்டிக்காட்டி, அந்த அடிப்படையில் “பிரதிபா பாட்டீலால் மன்னிப்பு வழங்கப்பட்டிருக்கும் கருணை மனுக்கள் தொடர்பான எல்லா ஆவணங்களையும் உச்ச நீதிமன்றம் கோரி இருப்பதாகத் தெரிகிறது என தனது ஊகத்தை வெளிப்படுத்தி உள்ளூர மகிழ்ந்தது. இவ்வாறு மனித உரிமைகளுக்கு எதிரான தனது கொள்கைகளைப் பகிரங்கமாய் வெளிப்படுத்திய தினமணி, கடந்த 26.6.12 அன்று இதுகுறித்த ஒரு கருத்துப்படத்தையும்  வெளியிட்டது.
அந்தக் கருத்துப்படம், எண்ணற்ற விஷத்தேள்கள் கருணை மனுவைக் கொண்டுவருவதாகவும், அதனைப் பார்த்து உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் “பாவம்! வாயில்லா ஜீவன்கள்’ என்று சொல்வதாகவும் அதனைக் கேட்ட பிரதிபா “சரி! பிழைச்சி போகட்டும்” என்று கருணை காட்டுவதாகவும்  வரையப்பட்டிருந்தது. கார்ட்டூனின் கீழே இப்படியாக செய்தி சொல்லப்பட்டது : “கடந்த 28 மாதங்களில் 30 கொலையாளிகளின் தூக்கு தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டிருக்கிறார் பிரதீபா பாட்டீல்.இதில் பெருவாரியானவர்கள் நமது ரத்தத்தையும் உறைய வைக்கும் கொடூரமான கூட்டுப்படுகொலை, வன்புணர்ச்சி, நரபலி உட்பட குழந்தைகளை ஈவு இரக்கமில்லாமல் கொல்வது சட்டவிரோத நடவடிக்கைகளுக்காகவும் கிரிமினல் குற்றங்களுக்காகவும் சிறைச்சாலைக்குப் போவதையே பொழுதுபோக்காகக் கொண்டவர்கள்! காட்டிய கருணையில் நமது உள்துறை அமைச்சருக்கும் பங்குண்டு!”

மொத்தத்தில் தலையங்கம், கருத்துப்படம் ஆகியவற்றின் மூலம் மரணதண்டனைகள் நீக்கப்படுவது குறித்த தனது காழ்ப்பை வெளிப்படையாகவே காட்டிக்கொண்டது தினமணி. இந்தவகையில் மரணதண்டனைகள் குறித்து தனது கொள்கைகளின் அடிப்படையில்  நின்று ஒருசார்பான தகவல்களையே ‘தினமணி’ அளித்திருக்கிறது. மரணதண்டனைகளின் குறித்த மனிதஉரிமைப் பார்வைகளை முழுமையாக இருட்டடிப்பு செய்திருக்கிறது. உண்மையில், மரணதண்டனைகள் அளிக்கப்படுவதன் / நிறைவேற்றப்படுவதன் பின்புலம் ரொம்பவும் பாரபட்சமானது.   ‘அம்னஸ்டி இன்டர்நேஷனல்’ என்கிற அமைப்பின் சார்பில் இந்தியாவில் மரண தண்டனை பற்றி மேற்கொள்ளப்பட்ட ஓரு ஆய்வு இங்கே சுட்டிக்காட்டத்தக்கது. 1947-ஆம் ஆண்டுக்குப் பிறகு மரண தண்டனை தொடர்பாக இந்திய உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கும்  700 தீர்ப்புக்களை ஆராய்ந்து அவ்வாய்வு எழுதப்பட்டது. சுமார் 200 பக்கங்கள் வரை நீளும் அந்த அறிக்கையை எழுதியிருப்பவர், இந்தியாவில் மரண தண்டனை குறித்து பல ஆண்டுகளாக ஆய்வுசெய்துவரும் இளம் வழக்கறிஞர், மனித உரிமை ஆர்வலர் பிக்ரம் ஜித் பாத்ரா அவர்கள். அந்த ஆய்வினூடாய் அறியப்பட்ட ஒரு முக்கிய தகவல் இங்கே குறிப்பிடத்தக்கது :
“இந்த சுமார் 700 தீர்ப்புக்களை வைத்துக்கொண்டு பார்க்கும்போது, ஒரு விஷயம் புலனாகிறது. குற்றம் சாட்டப்பெற்றவர்கள், சட்ட வல்லுநர்களைப் பணியமர்த்தும் வசதி கொண்டிருந்தால் - அதாவது சமுதாயத்தின் உயர்மட்டத்தில் இருந்தால் - அதைப் பயன்படுத்தி மரண தண்டனையிலிருந்து தப்பிக்கும் வாய்ப்புண்டு. அதேவிதக் குற்றத்தைச் செய்திருந்ததாகக் கருதப்பெற்றாலும் பிறர் - அதாவது, நகர்ப்புற வறியோர், தலித் மற்றும் ஆதிவாசி சமுதாயங்களைச் சார்ந்தவர்கள் போன்றோர் - இத்தகைய வசதிகள் அற்ற நிலையில் மரண தண்டனை பெறுவதற்கான வாய்ப்பே அதிகம் என்கிறது இந்த ஆய்வு. அதாவது, அமெரிக்காவில் மரண தண்டனை பெறுவோரில் கறுப்பின மக்கள், வறியோர் அதிகம் இருப்பதைப் போன்ற பிரச்னை இது எனத் தெரிகிறது2


மரணதண்டனைக்கு எதிராகக் குரலுயர்த்தும் மனித உரிமை ஆர்வலர்கள் அனைவரும் வலியுறுத்தும் மற்றொரு கருத்தும் இங்கே நினைவுகூரத்தக்கது. குற்றங்களைப் போக்குவதற்கும் குற்றவாளிகளைத் திருத்துவதற்கும் மரணம் ஒருபோதும் தீர்வாக முடியாது. உலகில் மரணதண்டனையை ஒழித்த நாடுகளிலெல்லாம் குற்றங்கள் தலைவிரித்தாடுவதில்லை அதேபோல மரணதண்டனையை அரசியல் சட்டமாகக் கொண்டிருக்கும் நாடுகளில் குற்றங்கள் குறைந்துவிடவுமில்லை. மேலும் இத்தகைய உச்சபட்ச தண்டனைகள் எல்லாம் தீரவிசாரிக்கப்பட்ட உச்சபட்ச குற்றங்களுக்கு மட்டுமே அளிக்கப்படுபவையும் அல்ல. ‘பேட்டரி’ வாங்கிக் கொடுத்ததாகச் சொல்லப்படும் பேரறிவாளனுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. திருத்தி எழுதப்படமுடியாத இந்தத் தீர்ப்பு எளியோரையும் பலமற்றவர்களையும் மட்டுமே பலிவாங்குவது சனநாயகத்திற்கு விரோதமானது ; ஒரு சனநாயக நாட்டின் சட்டத்தில் இருந்து ஒழிக்கப்படவேண்டியது.
மரணதண்டனையின் பின்புலத்தில் இயங்கும் இத்தகைய அரசியலை மூடிமறைத்து தனது கொள்கையை “உண்மைச் செய்தி” என்ற தோற்றத்தில் மக்கள் முன் வைப்பது ஊடக அறமன்று.மரண தண்டனையை நீக்கக்கோரி இந்திய அளவில் மனித உரிமை ஆர்வலர்களின் குரல்கள் மேலெழுந்துவரும் இன்றைய சூழலில் மரணதண்டனை என்கிற அரசகொலையை ஆதரித்து, சுதந்திர இந்திய வரலாற்றில் முதல்முறையாய் நிகழ்ந்தப்பட்டிருக்கும் இந்த அரிய சாதனையை, மக்கள் விரோதம், அதிகார துஷ்பிரயோகம், “செயற்கரிய சாதனை” என்றெல்லாம் கொச்சைப்படுத்தி ஏளனம் செய்திருக்கும் ‘தினமணியின்’ இந்தப்போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. மக்களுக்கு நிகழ்வுகளின் உண்மைத்தன்மைகளை அளிக்கவேண்டிய ஒரு ஊடகம் தனது தனிப்பட்ட சார்புகளை நிகழ்வுகளின் மீது ஏற்றி, வெகுமக்களை தனது கருத்தியலுக்கான கருவிகளாக மாற்ற முயற்சிப்பது  நேர்மையற்றது. மேலும் மரணதண்டனையை நீக்குவது என்பது அவர்களை குற்றமற்றவர்களாக விடுவிப்பது அல்ல. ஆயுள்தண்டனையாகக் குறைப்பதுதான். ஆனால் குடியரசுத் தலைவரின் செய்கையால் குற்றவாளிகள் தண்டிக்கப்படவே இல்லை என்பது போன்ற பிம்பத்தை தினமணி உருவாக்குகிறது.  எனவே இப்படியான செய்திகளை அளிப்பதில் ‘தினமணி’ இனிவரும் காலங்களிலாவது நேர்மையைக் கடைபிடிக்க வேண்டும்.
குறிப்பு : ‘தினமணியின்’ இந்தச் செய்திகளில் ஒரு தகவல் பிழையும் இடம்பெற்றுள்ளது. குடியரசுத்தலைவரால் மரணதண்டனையில் இருந்து விடுவிக்கப்பெற்றவர்கள் மொத்தம் 35 பேர். ஆனால் ‘தினமணி’ 30 பேர் எனச் செய்தி வெளியிட்டுள்ளது.
பார்வை:
கட்டுரை ஆக்கம் : மீனா

1 comment:

 1. தினமணியின் கருத்து கொடூரமான செயல்களை செய்தவர்களுக்கு இப்படி மன்னிப்பு அளிப்பது சரிதானா என்பதே.அவர்களில் எத்தனை பேர் ஏழைகள்,வறியவர்கள் மற்றும் போதுமான வசதிகள் இல்லாததல் இப்படி தண்டனை பெற்றவர்கள் என்பதை விமர்சிக்கும் நீங்கள்தான் கூற வேண்டும்.

  மரணதண்டனை என்ற தண்டனையை நீக்காத போது மன்னிப்பு வழங்கும் அதிகாரம் இப்படி பயன்படுத்தப்படலாமா என்ற கேள்வி எழத்தான் செய்யும்.அந்த மூன்று பேருக்கும் ஏன் இது போல்
  மன்னிப்பு வழங்கப்பட்டு மரண தண்டனை ஆயுள்
  தண்டனையாக குறைக்கப்படவில்லை என்று
  கேட்பது நியாயம்.ஆனால் நீங்களோ அவர்களுக்கு
  மன்னிப்பு வழங்கியதை விமர்சிப்பதையல்லவா
  முதன்மையாக எதிர்க்கிறீர்கள்.

  ” ‘பேட்டரி’ வாங்கிக் கொடுத்ததாகச் சொல்லப்படும் பேரறிவாளனுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.”
  தீர்ப்புகளை வாசித்துப் பார்த்துவிட்டு எழுதவும்.தீர்ப்பின்படி பேரறிவாளனின் பங்கு என்ன
  என்பதையும் தெரிந்து கொண்டு எழுதவும்.

  ReplyDelete