Thursday, May 31, 2012

தினத்தந்தியின் இனவாத புத்தி

இந்தியாவில் பல நேரங்களில் மொழி பத்திரிக்கைகள் (vernacular  newspapers ) பேரினவாதத்தையும் பெரும்பான்மை மதவாதத்தையும் அவ்வபோது ஆதரித்து வருகின்றன. அதற்கு தினத்தந்தியும் விதிவிலக்கல்ல. சென்னைக்கு அருகேயும் தமிழகத்தில் ஏனைய இடங்களிலும் அண்மையில் நடந்த வங்கி கொள்ளைகளை தொடர்ந்து வட இந்திய எதிர்ப்பு பாசிச பிரசாரம் ஊடகங்களில் அரங்கேறி வருகிறது.
 
 

வட இந்தியர்களை தமிழகத்தில் இருந்து வெளியேற்றி விட்டால் குற்ற செயல்கள் நின்றுவிடுவது போல் இத்தகைய பிரசாரம் நடைபெற்று வருகிறது.இதன் அங்கமாக அரசியல் சாசனத்துக்கு விரோதமாக அவர்களின் அடையாள அட்டைகளை கேட்பது மட்டும் அல்லாமல் கைரேகைகளை பதிவும் செய்கிறார்கள்.இவ்வாறாக வட இந்தியர்களை குற்றவாளிகளாக சித்தரித்து போலி மோதல்கள் மூலம்  போலீசார் அவர்களை கொல்வதற்கு வழி செய்யபடுகிறது.
 
இந்த போக்கின் தொடர்ச்சியாக 31/5/12 தினத்தந்தி (19ம் பக்கம்) ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது.  'வட இந்திய கலாசாரம் தமிழ்நாட்டில் பரவுகிறது, ரயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்வோர் எண்ணிக்கை அதிகரிப்பு'  என 3  பத்தி செய்தி வெளியிட்டுள்ளது. என்னவோ தமிழர்கள் அனைவரும் உரிய பயண சீட்டுடன் பயணம் செய்வது போலவும் வட இந்தியர்கள் மட்டும் பயணசீட்டு இல்லாமல் பயணம் செய்கிறார்கள் என்று ஆதாரம் இல்லாமல் இந்த செய்தி வெளியிடபட்டுளது.
 
பாஸ்கர்

4 comments:

 1. தினத்தந்தி இப்படியான ஒரு இன வெறுப்புப் பிரச்சாரத்தைத் தொடர்ந்து செய்துவருகிறது. இரு மாதங்களுக்கு முன் வேளச்சேரியில் 5 வடநாட்டு இளைஞர்கள் வங்கிக் கொள்ளையர்கள் எனச் சென்னைக் காவல்துறையால் குற்றம்சாட்டப்பட்டு என்கவுன்டர் என்கிற பெயரில் படுகொலை செய்யப்பட்டபோதும் இப்படித்தான் அது செய்தது. அப்போது அப்பத்திரிக்கையில் எழுதப்பட்ட தலையங்கம் ஒன்றில் தினந்தோறும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலயத்திற்கு வடநாட்டிலிருந்து வரும் ரயில்களில் ஆயிரக் கணக்கில் வடநாட்டார் வந்து குவிவதாகவும் அவர்களே எல்லாச் சட்ட விரோதச் செயல்களுக்கும் காரணம் என்பது போலவும் எழுதியிருந்தது. இப்படியான அவதூறைக் கிளப்பி மக்கள் மத்தியில் அச்சத்தைப் பரப்பியது ஆங்காங்கு வடநாட்டு இளைஞர்கள் தாக்கப்படுவதற்குக் காரணமாகியது. காவல்துறையும் இதற்கு ஒத்துழைத்தது.

  vernacular language newspapers என்பதற்கு 'மொழிப் பத்திரிக்கைகள்' எனச் சொல்வது குழப்பத்தை விளைவிக்கும். 'தல மொழி', 'உள்ளூர் மொழி', 'மாநில மொழி' போன்ற ஏதாவது ஒரு சொல்லைப் பயன்படுத்தலாம்.

  ReplyDelete
 2. தினத்தந்தி எழுதியதில் தவறேதுமில்லை.பயணச்சீட்டு வாங்காமல் பயணம் செய்வதும்,முன்பதிவு செய்யப்பட்ட இடங்களில் முன்பதிவு செய்யாமல் வந்து இடம் பிடித்துக்கொள்வதும் வடநாட்டில் வழக்கமாக நடப்பவைதான்.
  தினத்தந்தியை குறை கூற வேண்டாம்.அவர்கள் உண்மையைத்தான் எழுதியுள்ளார்கள்.அ.மார்க்ஸுக்கு இனவெறுப்பு பிரச்சாரத்தை விமர்சிக்க அருகதை கிடையாது.நான் மிகவும் வெறுக்கும் சாதி என்று ஒரு சாதியைப் பற்றி தன் முகநூலில் எழுதியவர் அவர்.இந்துமத வெறுப்பாளர் அவர்.ஜிகாதிய சக்திகளின் ஜால்ராப் பேர்வழி அவர்.

  ReplyDelete
 3. @Tamil, தினத்தந்தி எழுதியதில் தவறில்லை என்று எந்த ஆதாரத்தின் அடிப்படையில் சொல்கிறீர்கள்? பயணச்சீட்டு வாங்காமல் பயணிப்பது என்பது இந்தியாவெங்கும் பரவலாக நடைபெறுவது தான். கல்லூரி மாணவர்கள் தமது கேளிக்கைக்காகவும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் தமது வறிய சூழலின் காரணமாகவும் இவ்வாறு நடந்து கொள்கிறார்கள். சென்னை மாநிலக் கல்லூரியில் நான் பயின்று கொண்டிருந்தபோது எனது விடுதித் தோழி ஒருத்தி, பேருந்துகளில் பயணிக்கும் நாட்களில் தன்னால் இயன்றவரை – தனது பொருளாதார சூழலின் காரணமாக – பயணச்சீட்டு வாங்காமல் தான் பயணிப்பாள். எனது இன்னொரு தோழி கிண்டியிலிருந்து வருவாள். அவள் பலமுறை புலம்பியபடியே சொல்வாள் : “ச்சீ இந்த first stoping -ல மட்டும் பஸ் ஏறவே கூடாதுடி, டிக்கட் வாங்காம இருக்கலாம்னு பாத்தா அந்த கண்டக்டருங்க உடவே மாட்றானுங்க”. இன்னும் சிலர் பேருந்தில் ஏறிய உடனேயே பயணச்சீட்டு வாங்காமல் இரண்டு, மூன்று நிறுத்தங்கள் கடந்த பிறகு வாங்குவதை வழக்கமாகக் கொண்டிருப்பதையும் நான் பார்த்திருக்கிறேன். (அப்போது பயணச்சீட்டின் தொகை குறையும்)
  உண்மை இவ்வாறு இருக்க இவற்றை மூடிமறைத்து, பயணச்சீட்டு வாங்காமல் பயணிப்பதை ஏதோ வட இந்தியர்களுக்கே உரித்தான கலாச்சாரம் என்பதாக இட்டுக்கட்டுவதை ‘இனவாதபுத்தி’ என்று சொல்லாமல் வேறெப்படிச் சொல்வது? தமது மாற்றுக் கருத்தை வலியுறுத்த ‘அருகதை’ எல்லாம் எதற்கு? தான் மிகவும் வெறுக்கும் சாதி என்று அ.மார்க்ஸ் பார்ப்பனிய ஆதிக்க சாதியைத் தான் குறிப்பிட்டார். அந்த சாதியை அ.மா மட்டுமல்ல, பெரியார், அம்பேத்கர், பாரதி, ஜோதிபா புலே என இந்தியச் சமூகத்தின் அடிமைத்தளைகளை ஒழிக்கப் போராடிய அத்தனை சீர்திருத்தவாதிகளும் தான் வெறுத்தார்கள். அ.மார்க்ஸ் இந்துமத வெறுப்பாளர் அல்லர். ‘இந்துத்துவ’ வெறுப்பாளர். அவரை ‘இஸ்லாமியர்களின் ஜால்ரா’ என வர்ணிப்பது வழமையான R.S.S குற்றச்சாட்டு. இதில் விளக்குவதற்கு ஒன்றுமில்லை.
  ‘கவனிக்கிறோம்’ வலைப்பக்கப் பதிவுகள் மீதான உங்களது கருத்துக்களை தயவுசெய்து ஆக்கப்பூர்வ விமர்சனமாக வெளிப்படுத்துங்கள். தனிநபர்கள் மீதான பகைகளை தீர்த்துக் கொள்வதற்கு இது இடமன்று.

  ReplyDelete
 4. பாஸ்கர்
  தமிழ் என்பவர் வட இந்தியர்கள் பயணசீட்டு வாங்காமல் பயணம் செய்கிறார்கள் என்ற தினத்தந்தியின் கருத்தையே எவ்வித ஆதாரமும் இல்லாமல் மீண்டும் வழிமொழிகிறார். சென்னையில் ஓடும் பேருந்துகளில் பயணம் செய்யும் கல்லூரி மாணவர்கள் பல தமிழர்கள் உரிய பயணசீட்டு இல்லாமல் பயணம் செய்வதை அனைவரும் அறிவர். கடந்த சில ஆண்டுகளாக சென்னையில் பரிசோதகர்கள் அதிகளவில் பரிசோதனை செய்கிறார்கள். உரிய பயண சீட்டு இல்லாமல் தமிழர்கள் பயணம் செய்வதையே இது காட்டுகிறது.



  சென்னையில் ஓடும் மாநகர அரசு பேருந்துகளின் எண்ணிக்கை 3500 ஆனால் டெல்லியில் 8000 பேருந்தும், மும்பையில் 6000 பேருந்தும் ஓடுகிறது. இங்கெல்லாம் உரிய பயணசீட்டு இல்லாமல் வட இந்தியர்கள் பயணம் செய்கிறார்களா? அரசாங்கம் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறதா? சென்னையில் தாம்பரம்,கும்முடிபூண்டி,ஆவடி வழித்தடத்தில் உரிய பயணசீட்டு இல்லாமல் பயணம் செய்து அபராதம் கட்டுவது அன்றாட நிகழ்வாகும். எல்லா சிக்கல்களுக்கும் முஸ்லிம்களையோ பாகிஸ்தானை காரணம் காட்டும் இடத்தில வட இந்தியர்களும் வந்துவிட்டனர்.



  வட இந்தியர்களின் மலிவான உழைப்பு மட்டும் தமிழர்களுக்கு தேவைப்படுகிறது. அதனால் ஒரு சில வட இந்தியர்கள் பயணசீட்டு வாங்கததை பெரிய விஷயமாக்கபடுகிறது.டெல்லி மெட்ரோ ரயில் நிலையங்களில் ஸ்மார்ட் கார்டு தான் பயணசீட்டு என்பதால் பயணசீட்டு இல்லாமல் யாரும் நடைமேடைக்கு செல்ல முடியாது.வட இந்தியர்கள் உரிய பயணசீட்டு இல்லாமல் பயணம் செய்கின்றனர் என்பது பொய்யானதே ஆகும். பயணசீட்டு விலையை மக்களின் பொருளாதார சக்திக்கு ஏற்ப குறைப்பதும் நெரிசல் இல்லாத வாறு அதிக எண்ணிக்கையில் பேருந்துகளையும் ரயில்களையும் இயக்கினால் பயணசீட்டை வானகத வட இந்தியர்களும் வாங்குவர். பயணசீட்டை வாங்காமல் ஆண்டுகணக்கில் பயணம் செய்யும் தமிழர்களும் வாங்குவர்.

  ReplyDelete